Friday 28 June 2013

கலாச்சாரம்

நேற்று சன் நியூஸ் தொலைக்காட்சி விவாத மேடையில் இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஆபாசத்தை பற்றியும் அதனால் எற்படும் கலாச்சார சீரழிவு மற்றும் அதை முடக்குவது தொடர்பான விவாதத்தை பார்க்க நேர்ந்தது (வழக்கம் போல் பாதியில் இருந்து தான்). அதில் விருந்தினர்கள் அனைவரும் ஒரே கருத்துகளை முன் வைக்க அராத்து அவர்கள் மட்டும் மாற்று கருத்தை பதிவு செய்தார். 

விவாத இறுதிக்கட்டத்தில் நமது கலாச்சாரம் வெளிநாட்டில் இல்லாத மிக உன்னதமானது எனவும் ஆபாச இணையதளங்களால் இளைய தலைமுறையினர் சீரழிவதை தடுக்க அனைத்தும் தடை செய்ய வேண்டும் என முடிக்கப்பட்டது. இப்பதிவு மேற்கூறியதை பற்றியல்ல. விவாதத்தில் உபயோகிக்கப்பட்ட ஒரு சொல்லை பற்றியது. அந்த சொல் "நமது கலாச்சாரம்"

உண்மையில் நம்ம கலாச்சாரம் அவ்வளவு சிறந்ததா? என்ற எண்ணம் எனக்கு எற்பட்டது, இப்போ இல்லை, கிட்டத்தட்ட 20வது வருடத்திற்கு முன்னால். அப்போ எனக்கு இந்த எண்ணம் எற்பட காரணமாக இருந்த ஒரு நிகழ்வையும் அதே காலத்தில்  வாரபத்திரிக்கையில் வந்த செய்தி ஒன்றையும் நான் இங்கு அப்படியே பதிவு செய்கிறேன். எது சிறந்த காலாச்சாரம் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். இதை படிப்பதற்கு முன்னால் மீண்டும் நினைவுபடுத்தி கொள்ளுங்கள். இந்த எண்ணம் எனக்கு வந்தது சுமார் 20 வருடத்திற்கு முன்னால். 

எனது சிறுவயதில் எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்த ஒரு சகோதரியின் வாழ்க்கையில் எற்பட்ட சோகம் என்னை வெகுவாக  பாதித்தது. என்னைவிட அவர்கள் சுமார் 10 வயது பெரியவர்கள்.அவர்களுக்கு அப்போ வயது சுமார் 23 இருக்கலாம்.  நான் அவர்களை அக்கா என்று தான் அழைப்போன். எனது வீட்டில் எனக்கு பிடிக்காத சமையல் செய்யும் போது வீம்புக்கு நான் சாப்பிடாமல் இருக்கும் போது அவர்கள் என்னை பலவந்தமாக அவர்கள் வீட்டில் சாப்பிட் வைப்பார்கள். எனது கூட பிறக்காத சகோதரியாக அவர்கள் என் மீது பாசம் வைத்திருந்தார்கள். பல நேரங்கள் எங்கள் அம்மாவுடன் எங்கள் வீட்டில் தான் இருப்பார்கள். எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்களை ரொம்ப பிடிக்கும். அவர்களுக்கு அம்மா கிடையாது. அவர்கள் அப்பாவும் அண்ணன்களும் பல இடங்களில் தேடி எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு வரன் பிடித்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள் (ஜோஸியம் லொட்டு லொசுக்கு எல்லாம் பார்த்துதான்). அவர்கள் திருமணமும் மிக சிறப்பாக நடைப்பெற்றது. மாப்பிள்ளையும் அவர்கள் எதிர் பார்த்ததைவிட நல்லவராக இருந்தார். அந்த அக்காவை போல் அவரும் எங்களுக்கு ஒரு புது உறவாக கிடைத்தார். இந்த மகிழ்ச்சியெல்லாம் சில மாதங்களே நீடித்தது. ஒரு வருடங்களுக்குள்ளாக அந்த சகோதரியின் கணவர் ஒரு விபத்தில் இறந்தார். அந்த வயதில் அந்த சோகம் எனக்கே மிக பெரிய பாதிப்பை எற்படுத்திய போது மற்றவர்களை பற்றி சொல்ல தேவையில்லை. இந்த மரணத்தால் ஒருவருடையதல்ல, இருவருடைய வாழ்க்கை அழிந்ததால் துக்கம் இருமடங்காக ஆனது. சந்தோசமாக நான் சாப்பிட்ட வீட்டில் துக்க காரிய நாளில் சாப்பிட்டது எனக்கு நரக வேதனையை தந்தது.அதன் பின் அந்த சகோதரி தன்னுடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டாள். யாரிடமும் சரியாக பேச மாட்டார்கள்.பொதுவாக எந்த சுப நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார்கள்.  ஒருவேளை மற்றவர்கள் தன்னை பார்க்கும் போது அபசகுனமாக நினைக்க கூடும் என்ற எண்ணமாக இருக்கலாம்.  எங்களுக்கு அவர்களோடு தொடர்ப்பு இருந்த வரை அந்த சகோதரி மறுமணம் செய்து கொள்ளவில்லை, அவர்கள் அப்பாவும் அண்ணன்களும் எவ்வளவு வலியுருத்தியும். அதற்கு அவர்கள் மனமும் இடம்  தரவில்லை (ஒருவேளை மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அதே எண்ணம் எற்பட்டுருக்கலாம்) . 

அதே காலகட்டத்தில் ஒரு வாரபத்திரிக்கையை படிக்க நேர்ந்தது. அதில், வெளிநாட்டில் ஒரு மணமகளையும் அவரை அழைத்து செல்லும் ஒருவருடைய புகைப்படமும் இருந்தது. அதன் கீழ் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அது, மணமகளை மணமேடைக்கு அழைத்து செல்லும் நபர் மணமகளுக்கு என்ன உறவாக இருக்கும் என்று.

அதன் பதில். 

மணமகளை அழைத்து செல்லும் நபர் மணமகளின் மகன். அந்த மணமகளுக்கு 50 வயதாகிறது. தன்னுடைய மகன் முன்னிலையில் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்கிறாள். 

தான் மட்டும் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது தன்னுடைய அன்னை தனிமையில் இருப்பதை விரும்பாத மகன், முன்னின்று நடத்திய திருமணம் அது. 50 வயதானவர்களுக்கு கூட ஒரு புதிய வாழ்க்கை தேவை என எண்ணும் ஒரு சமுதாயம் இருக்கத்தான் செய்யுது.

இங்கு முதல் திருமணம் நன்றாக அமைந்தால் சரி இல்லையென்றால் புதுவாழ்க்கையை அமைத்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல தற்போது (முன்னாடி அதுவும் வாய்ப்பில்லை). உடன்கட்டை ஏறும் பழக்கம் நம்நாட்டில் தான் இருந்தது என எண்ணும் போது உண்மையில் நமது கலாச்சாரம் உன்னதமானதா? என்ற கேள்வி எழுகிறது.


No comments:

Post a Comment