Wednesday 24 July 2013

குட்டி தேவதை - கவிதை


அழகிற்கே அழகு சேர்க்கும் இரண்டு
வயது குட்டி தேவதை என் தங்கை...

சின்னச்சிறு கைகளால் என்னை 
அடிக்கும் போதும்
என் புத்தகங்களை கலைக்கும் போதும்
எனக்கு கோபமே எற்பட்டதில்லை...

அப்பாவின் அயர்ன் செய்த சட்டையை 
கலைக்கும் போதும்
அவர் கைபேசியில் விளையாடும் போதும்
அப்பாவின் கோபம் அம்மாவிடம்...

பூஜையறையில் கட்டுப்பாடு 
எனக்கு மட்டுமே...!

மழலை குரலில் அவள் பாடும் கானம்
வீடெங்கும் எதிரொலிக்கும்...

அவளின் ஒவ்வொரு அசைவையும் 
பார்த்து பார்த்து
மகிழ்ந்தோம் நித்தம் நித்தம்...

ஒவ்வொரு முறையும் பள்ளிவிட்டு 
வரும் போது
மகிழ்ச்சி பொங்க ஒடிவந்து
கட்டி அணைப்பாள்...

ஒடிபிடித்து, மறைந்து நின்று, பூச்சாண்டி காட்டி
விளையாடியது அனைத்தும் 
நின்றது ஒரு நாள்...

காய்ச்சலில் அவள் விழும் போது
லேசான காய்ச்சல் என நினைத்தோம்...

ஆனால் காய்ச்சல் நிற்காததால்
செய்வதறியாமல் தவித்தோம்...

உற்றார் உறவினர், நண்பர்களின் பரிந்துரையில்
டாக்டர்கள் மாறினார்கள் ஆனால்
காய்ச்சல் மறையவில்லை...

ஊசிகளும், மாத்திரை, மருந்துகளும்
அவளை நிலைகுலைய செய்து
நிறம் மாற செய்தன...

முருகன், சிவன், ஐயப்பன் என
அனைத்து கோயிலுக்கும் சென்று வேண்டி
தீறுநீரு பூசுகிறால் அம்மா...

பீட்டர் அண்ணாவுடன் சர்ச்சில்
பிரார்த்தனையும்...
பானு அக்காவுடன் தர்காவில் தாயித்தும்...
கட்டி வேண்டிக்கொண்டார்கள்...
அவளை மீட்டெடுக்க...

அனைத்து கடவுளிடமும் உள்ளம்
உருகி வேண்டிக்கொண்டும்
காய்ச்சலின் வீரியம் மட்டும்
குறையவில்லை...

இரவில் அவளின் வலியின் முனங்கல்கள்
என் உயிரை உறைய செய்தது...

காது பொத்தி தலையணையில் முகம் 
புதைத்தேன் கேட்க முடியாமல்...

ஒருநாள்...
பள்ளியிலிருந்து என்னை 
அழைக்க வந்தார் பீட்டர் அண்ணா...
வீட்டிற்கு வருமுன்னே சோகம் 
என்னை கவ்வியது...

உள்நுழைந்து அன்னையிடம் 
செல்லும் போது...

முகம் மட்டும் தெரிய துணியால்
சுற்றப்பட்டு விட்டின் நடுவில்
கிடத்தப்பட்டு இருக்கின்றாள் என் தங்கை...

புத்தகப்பையை கழட்டும் முன்பே 
கட்டியணைத்து  கதறினால் அன்னை...

என்னையறியாமல் அழுகை பீரிட்டது...

மாலையில் அன்னையின் கதறலோடு
எடுத்து செல்லப்பட்டாள்...
புதைப்பதற்காக...

இரவில் தலைசாய்ந்து யார் மடியிலோ
தூங்கிப்போனேன்...

கனவுகள் என் தூக்கத்தை கலைக்க
கண்மூடி கிடந்தேன்...

பின்னிறவில் நான் மட்டும்
பூஜையறையிலிருந்த அனைத்து படங்களையும்
குப்பைதொட்டியில் வீசினேன்...

தங்கச்சி பாப்பாவின் புகைப்படமும்
பொம்மைகளையும் வைப்பதற்கு...
                   

                           ***********




கடல் காற்று வீசும்......

Monday 22 July 2013

தாகத்தை தீர்த்த கானல்நீர் - உரைநடை கவிதை



விடியும் வரை காத்திருந்தும்,
அலைபேசியில் அழைப்பில்லை
குறுச்செய்தியுமில்லை...

இதயத்தின் வலியாக உருமாறியது
இந்த காத்திருப்பு...

வேதனையில் அணுஅணுவாக
நான் துடிக்க, காலம் ஆயிரம்
ஊசிகளால் நொடிக்கொருதரம்
 துளைத் தெடுக்கிறது..

நேற்றுவரை இன்பத்தை தந்த உறவு
இப்பொழுது ஓவ்வொரு நொடியும் 
மரண  வேதனையை தருகிறது...

காதலுடன் வழங்கிய முத்தமும்,
பெறப்பட்ட முத்தங்களும் 
காமமாக தேன்றுகிறது

முதல் முறையாக எதோ தவறு 
செய்த உணர்வும்,கழிவிரக்கவும் 
என்னை ஆட்கொள்கிறது...

இனி நெஞ்சுறுதி துளியும்
இல்லை என் 
தனித்தன்மையை மீட்டெடுக்க... 

பசியற்ற உடலையும், வேதனையில் 
கலையிழந்த முகத்தையும்
இனி  மறைக்க முடியாது...

இருவர் மட்டும் இருக்கும் போது 
உறுதியாக இருந்த காதல்...

உறவினர்களிடமும்,
சமூகத்திடமும் வரும் போது
உடைந்து நிறம் மாறுகிறது...

காதலின் இன்பத்தை விட
வெறுமையான தனிமையே மேல்
என ஏன் தோன்றாமல் போனது?

உள்ளமும், புறமும் வெந்துபோய்
கிடக்கையில், அவலமும்
இயலாமையும் தான் மிஞ்சுகிறது...

அலுவலகத்தில் எளனமாக
பார்த்த பார்வைகளுக்கு
பதில் சொல்ல முடியாது..

சற்று கண்ணையர்ந்து
வேதனையில் முனங்கிகொண்டிருக்க

அழைப்புமணி ஒலிக்கிறது....

பிரமை என நினைக்கையில் மீண்டும்
ஒலிக்கிறது விடாமல்...!

உயிரற்ற உடலையை போல்
கணத்த இதயத்துடன்
நடத்து செல்கிறேன் கதவை நோக்கி...

பால்காரியோ, போப்பர் பையனோ
பதில் தந்து அனுப்பிவிட வேண்டும்
என் நிலையை அறியும் முன்...

கதவை திறந்து பார்க்கையில், ஆயிரம்
வேதனை தந்துகொண்டுருப்பவன்
நிற்கிறான்...

அறையலாமா அல்லது கட்டியணைத்து
அழலாமா...!

செய்வதரியாமல் நிற்கிறேன் மரம் போல்...

கண்டேன் சீதையை என்ற
அனுமானை போல்
"11 மணிக்கு நமக்கு திருமணம்" என்கிறான்...

ஒருநொடி அமைதிக்கு பின் "எனக்கு
ரவி சார், உனக்கு சாருலதா மேடமும்
சாட்சி கையெழுத்து போடுவார்கள்"
என சொல்லி
மனநிறைவுடன் சிரிக்கிறான்...

துடிக்க வைத்த வேதனை அனைத்தும்
அழுகையாக பீரிட, அவனை கட்டியணைத்து
இருக்கினேன் என் பலம் கொண்டு...

விம்பும் என் மார்பகம் அவன்
நெஞ்சையழுத்த,
நிலைதடுமாறி கதவில் சாய்ந்தோம்
சத்தத்துடன்...

"ஏய் லூசு, குழந்தை எழ போகுது"
"எழுந்தா என்ன"
"எழுந்தா இனி அங்கிள் இல்லை
அப்பானு செல்லு" என்று உச்ச முகர்ந்தான்...

சிவந்த கண்களிலிருந்து
துளிர்த்தது ஆனந்த கண்ணீர்
இருவரிடமும்...

இனி பொய் முகமுடி போட்டு
திரிபவர்களின் பேச்சை
பற்றி கவலையில்லை
எங்களுக்கு...

********



கடல் காற்று வீசும்........

Wednesday 17 July 2013

Talaash - இந்தி பட விமர்சனம்

தமிழ் படங்களை பார்த்து பார்த்து போர் அடித்ததால் ஒரு மாற்றத்திற்கு மற்ற மொழி படங்களை பார்ப்பது வழக்கம் (டிவியில் தான்). இந்தியாவில் இந்தி படங்கள் தான் மிக பெரிய வியாபார தளமாக உள்ளது. பொதுவாக தமிழ் படங்களை விட இந்தி படங்கள் தரத்தில் முதன்மையாக உள்ளது என்பதனை கசப்புடன் ஒத்துக்கொள்ள வேண்டும்.


அமீர் கானின் படம் என்றாலே எனக்கு ஒருவித ஈர்ப்பு வருகிறது ( லகான்னுக்கு பிறகு ) உண்மையில் இப்படத்திலும் தன்னுடைய நடிப்பால் இதை மீண்டும் நிருப்பித்திருக்கின்றார். தமிழில் பொதுவாக பெரிய நடிகர் படங்களில் அதிக முக்கியத்துவம் அந்த நடிகருக்கே கொடுக்கப்படும் மற்றும் அதிக காட்சிகள் அவரை சுற்றியே செல்லும். பெருன்பான்மையாக அவரை முன்னிருத்தியே படம் செல்லும். துணை நடிகர்களுக்கு அவ்வளவாக முக்கியத்தும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நிறைய இந்தி படங்களில அவ்வாறு இருப்பதில்லை. இங்கு ஒவ்வொரு நடிகருக்கும் கதைக்கு தேவையான அளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், நன்கும் பயன்படுத்திகொள்கிறார்கள். நிறைய இந்தி படங்களில் கதாநாயகிக்கு கதாநாயகனுக்கு நிகராக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இந்த படத்திலும் அமீர் கானுக்கு நிகராக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அமீர் கான்  தன்னுடைய ஆர்பாட்டமில்லா நடிப்பால் நம்மை வியக்க வைக்கிறார். இனி கதைக்குள் செல்வோம்.

முதல் காட்சியே நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கின்றது. கடற்கறை ஓரமாக உள்ள அந்த சாலையில் செல்லும் கார் தீடீரென விபத்துக்குள்ளாகி பாதை மாறி கடலில் விழுவதை பார்க்கும் போதே த்ரில்லிங்கை நாம் அனுபவிக்க ஆரம்பித்துவிடுகின்றோம். இந்த விபத்தை துப்பறியும் பொருப்பை எற்கிறார் இன்ஸ்பெக்டர் அமீர். விபத்திற்குள்ளாகும்  காரை கடலில் இருந்து கிரென் முலம் வெளியே எடுத்து பார்த்தால் ஒரு பிரபல நடிகர் இறந்து கிடக்கிறார். அவர் குடித்துவிட்டு வண்டி ஒட்டவில்லை மற்றும் அவருடன் யாரும் பயணம் செய்யவில்லை, வண்டியின் ப்ரேக் முதலியவை நல்ல கண்டிசனில் இருக்கிறது. சாலையில் அந்த நேரத்தில் யாரும் இல்லை மற்றும் அவர் தன்னுடை படபிடிப்பு தளத்தில் இருந்து சென்ற பிறகு இரண்டு மணிநேரம் கழித்து விபத்து நடைப்பெற்று இருக்கிறது.  அந்த நடிகர் தனியாக கார் ஒட்ட விருப்பம் இல்லாதவர், எப்போதும் தன்னுடைய கார் டிரைவருடன் தான் செல்லுவார், அன்று மட்டும் ஏன் தனியாக சென்றார்? போன்ற கேள்வியால் அமீர் குழப்பம் அடைகிறார்.


பின் நடிகரின் மனைவியிடம் விசாரணை செய்யும் போது விபத்து நடத்த காலையில் அவர் அதிக பணத்தை கொண்டு சென்றது தெரிய வருகிறது. அந்த பணப்பை காரில் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் விசாரணை செல்லுகிறது. பின்னர் இந்த பணம் விபாச்சார புரோக்கர் ஒருவனுக்கு கொடுக்க எடுத்து செல்லப்பட்டது என்பதையும், அவன் இந்த நடிகரை முன்று வருடமாக ப்ளாக்மெயில் செய்து கொண்டுருப்பதை அறிந்த அமீர். விபச்சார விடுதிக்கு சென்று விசாரணையை மேற்கெள்ளும் போது அவன் சொந்த ஊருக்கு ஓடிவிட்டது தெரிய வருகிறது. இந்த விசாரணையின் போது தான் விபச்சாரியான கரீனா கபுர் அமீரை சந்திக்கிறாள் (கவனிக்கவும் அமீர் சந்திக்கவில்லை).




கரீனா கபுர் விசாரணைக்கு அவருக்கு உதவி செய்கிறார். விசாரணையின் போது அமீர் இரவு முழுவதும்  கரீனா கபுருடன் சுற்றி திரிகின்றார். இதற்கு விசாரணை மட்டும் காரணமல்ல சில வருடங்களுக்கு முன் தன் மகனை ஒரு ஏரியில் நடத்த விபத்தில் இழக்கிறார் (தண்ணீரில்  முழ்கி மகன் இறந்துவிடுகிறான் ). இதற்கு தன்னுடைய அஜாக்கிரத்தை தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் இரவில் துக்கமில்லாமல் சுற்றி திரிகின்றார். இதனிடையில் தன் மனைவி ராணி முகர்ஜி ஆவிகளுடன் பேசும் பெண்மணி முலம் இறந்த தன்னுடை மகனுடன் பேசுகிறாள். இதனை அறியும் அமீர் இது முட்டாள் தனமானது என்று தன் மனைவியை கண்டிக்கின்றார். ஆனால் தனக்கு இதில் தான் நிம்மதி இருப்பதாக செல்லி தன் தோழியின் வீட்டிற்கு சென்று விடுகின்றாள். இதனால் அதிக மன உளைச்சலுக்கு அளாகிறார். பின் கிளைமாக்ஸில்  அமீர் கரீனா கபுரின் உதவியால் விபத்திற்கு காரணத்தை கண்டுபிடிக்கும் போது தான் அனைத்தும் அவருக்கு புலப்படுகிறது (நமக்கும் தான், அட போங்கட நீங்களும் உங்க சீனிமாவும்).


கரீனா கபுர் தேவையில்லாம் இதில் திணிக்கப்பட்டதாக அரம்பத்தில் அனைவருக்கும் தோன்றும். ஆனால் அவரின் கதாபாத்திரத்தின் அழுத்தம் படத்தின் முடிவில் தான் தெரிகின்றது. ராணி முகர்ஜியும் கரீனா கபுரும் தங்கள் நடிப்பை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள்.

அமீர் கானை பற்றி சொல்ல வேண்டும் எனில் அவர் மிக பெரிய நடிகர் எனினும் ஒரு சண்டை காட்சி கூட இல்லாமல் கதைக்கு தேவையான அளவிற்கு மட்டும் நடித்திருப்பது பிற நடிகர்கள் கற்க வேண்டிய பாடம். 

 இந்த படத்தில் என்னை அதிகம் ரசிக்க வைத்தது துணை நடிகர்களின் நடிப்பு குறிப்பாக புரோக்கருக்கு ஏடுபிடி வேலை செய்யும் அந்த நபரின் நடிப்பும் அவருக்கும்  விலைமாதுவிற்கும் இடையே இருக்கும் காதலை அழகாக பதிவு செய்திருக்கிறார்கள். அந்த விலைமாதுவின் பாத்திரப்படைப்பு அவளின் வலியை உணர செய்கிறது (கதாநாயகியை விட) .

இப்படத்தில் சில லாஜிக் சருக்கல்கள் இருக்கிறது. உதாரணமாக புரோக்கர் தன்னுடைய சிம் கார்டை மாற்றும் போது அதை உடைக்காமல் துக்கிப்போடுவது ஏன்? நாம சின்ன துண்டு சீட்டையே சுக்குநுறாக கிழிக்கும் போது அந்த சிம் கார்டால் தனக்கு அபத்து வரும் என தெரிந்தும் அதை அப்படியே துக்கி போடுவார்களா? அதை யாராவது எடுத்து பயன்படுத்துவார்கள் என்ற சிறு அறிவு கூடவா இல்லாமல் இருக்கும். மற்றொன்று புரோக்கரிடம் ஏடுபிடி வேலை செய்யும் அந்த கால் ஊனமுற்ற நபர் இறந்த நடிகரின் நண்பனிடம் இருந்து ப்ளாக்மெயில் முலம் வாங்கிய பணப்பையும் அவனுடன் ஓடி செல்ல வரும் விலைமாதுவும் ஒரே கலரில் பேக் வைத்திருப்பது எப்படி? போன்றவைகளை சொல்லலாம்.

பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கின்றது குறிப்பாக டைட்டில் சாங்க் மிக இனிமையாக இருக்கிறது. பல முறை கேட்டு ரசிக்கலாம்.  இதன் கிளைமாக்ஸ் எனக்கு உடன் பாடு இல்லை என்றாலும் ரசித்தேன். 

சஸ்பேன்ஸ் த்ரில்லர் ரசிப்பவர்களை கண்டிப்பாக ஏமாற்றாது இந்த படம். 
ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

பீகார் பள்ளியில் நெஞ்சை உருக்கும் துயரம்

பாட்னா, ஜூலை 16-

பீகார் மாநிலம் சரன் மாவட்டம் கர்மசாதி காந்தவான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தைகளை சாப்ராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 11 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். 

மேலும் 48 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

குழந்தைகள் சாவுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட உணவே காரணம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

மாணவர்கள் சாவு தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

- மாலைமலர் செய்தி http://www.maalaimalar.com/2013/07/16190752/bihar-government-school-lunch.html