Thursday, 30 May 2013

புத்துயிர்ப்பு (Resurrection)


புத்தகங்கள் மனிதனுக்கு கிடைத்த வரபிரசாதம் என்றால் மிகையில்லை. புத்தகங்களின் மீது அதிக பற்று வைத்திருத்தவர்கள் எனக்கு நண்பர்களாக கிடைக்கப்பெற்றதால் தான், உலக புகழ் பெற்ற  ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. ரஷ்ய நாவல்கள் அதிகம் படித்ததால் என்னவோ எனக்கு மற்ற புத்தகங்களின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்தது. எனக்கு அதிகம் பிடித்த ரஷ்ய நாவல்கள் போர் இல்லாத இருபது நாட்கள்,  அதிகாலை அமைதியிலே, விடி வெள்ளி, செம்மணி வளையல்கள், அலெக்சாந்தர் புஷ்கினின் ஸ்பேடுகளின் ராணி, வெண்ணிற இரவுகள், மூன்று காதல் கதைகள் மற்றும் லேவ் தல்ஸ்தோய்யின் புத்துயிர்ப்பு. இதில் அதிகாலை அமைதியிலே என்ற நாவலையை உல்டா செய்து எடுக்கப்பட்ட படம் தான் பேராண்மை. இந்த படம் வந்த போது என் நண்பன் இந்த படத்தை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான். அவனுக்கு அந்த நாவல் ரொம்ப பிடித்திருந்ததால் இந்த படத்தை இவ்வாறு உல்டா செய்து எடுத்தது அவனுக்கு பிடிக்கவில்லை. நாங்கள் நிறைய நேரங்களை  இந்த புத்தகங்களை பற்றி பேசியே கழித்திருக்கிறோம். இந்த புத்தகங்கள் ஒரு புதிய உலகத்திற்குள் செல்லும் வாய்ப்பை எனக்கு எற்படுத்தி தந்தன . 



மொழிபெயர்ப்பு நாவல்கள் படிக்க தொடங்கியவுடன் எனக்கு கிடைத்த இரண்டாவது புத்தகம் புத்துயிர்ப்பு நாவல். இந்த புத்தகத்தை எனக்கு தரும் போது இப்புத்தகத்தை பற்றிய சிறப்பை நண்பன் கூறவில்லை. நல்ல புத்தகம்  என்ற ஒற்றை வார்த்தையில் சொன்னான். பொதுவாக நண்பர்களிடம் வாங்கும் புத்தகத்தை நான் 99.99% திருப்பி தந்துவிடுவோன். அந்த மீதி உள்ள 0.01% அவர்களே எனக்கு அன்பளிப்பாக தரும் புத்தகத்தை குறிக்கும்.(பின்னர் புத்துயிர்ப்பு நாவலை எனக்கு அன்பளிப்பாக தந்த நண்பனுக்கு நன்றி). புத்துயிர்ப்பு நாவலை நான் படிக்கும் போது எந்த எதிர்பார்ப்பும் இன்றி படிக்க ஆரம்பித்தேன்.  ஆனால் ஒவ்வொரு பக்கமும் எனக்கு ஒருவித பிரமிப்பை எற்படுத்தியது.லேவ் தல்ஸ்தோய் அவர்கள் எதற்காக இந்த நாவலை எழுதினார் என்பதை பின்னர் அறிந்த போது பிரமிப்பு இரண்டு மடங்காக ஆனது. புத்தகத்தை எழுத அவர் எடுத்துகொண்ட பத்தாண்டுகளில் அவருக்கு எற்பட்ட  கழ்டங்களை இந்த புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாம் உணர முடியும். புத்தகத்தின் முதல் பாகத்தில் 37 மற்றும் 39 & 40வது அத்தியாயங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.  புத்தகத்தை ஒரே இரவில் என்னால் படிக்க முடியவில்லை என்றாலும் அந்த இரவுகளில் படிக்கும் போது எற்பட்ட அந்த பிரமிப்பு அதனால் எற்பட்ட அனுபவத்தையும் இப்போது நினைக்கும் போதும் ஒருவித மகிழ்ச்சி என்னுள் எழுகிறது.

இன்நாவலை மொழிபெயர்த்த ரா. கிருஷ்னையா அவர்களையும் இங்கு நினைவு கூற வேண்டும். இவரை விட வேறு யாரும்  இவ்வளவு திறம்பட மொழிபெயர்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. நாவலை படிக்கும் போது அதில் வரும் நெஷ்லுதவையும், மாஸ்லவாவையும் உயிருடன் நம் கண்முன் நிழலாட செய்திருப்பார். ஒரு முறை அல்ல, பலமுறை   அனைவரும் படிக்க வேண்டிய ஒரு அற்புத படைப்பு இந்த புத்துயிர்ப்பு நாவல். அப்படி நீங்கள் இதுவரை படிக்கவில்லையென்றால் உடனே தேடிபிடித்து  படியுங்கள்.


கடல் காற்று வீசும்.......


Thursday, 23 May 2013

cuttlefish (கணவாய் மீன்)


நுலகத்தில் கடல் உயிரினங்களை பற்றி படிக்கும் போது என் கண்ணில் பட்டது இந்த கணவாய் மீன். இதன் ஆங்கில பெயர் cuttlefish. ஒரு சாதாரண உயிரினம் என்று நாம் நினைக்கும் பல உயிரினங்கள் அதிசயத்தக்க சிறப்பு இயல்புகளை கொண்டு இருக்கும் என்பதை நாம் அறிவோம். அதை போன்று ஒரு அதிசய உயிரினம் தான் இந்த கணவாய் மீன். கணவாய் மீன் என்ற பெயர் காரணமாக நான் இதனை மீன் இனம் என்று நினைத்துவிட்டேன், ஆனால் படிக்கும் போது தான் தெரிந்தது, இது Cephalopoda என்ற உயிரின வகையைச் சேர்ந்தது என்று. இந்த வகையை சேர்ந்த மற்ற உயிரினங்கள் தான் Octopus,Squid,nautiluses. இவை அனைத்தும் முதுகெலும்பில்லாத கடல் வாழ் உயிரினங்கள் ஆகும். 



கணவாய் மீனின் மேல்பகுதி மேடிட்டு இருந்தாலும் அதன் அடிப்பகுதி தட்டையாக இருக்கும். இதனுடைய தோலின் அடி பகுதியில் பல நிறங்களை கொண்ட வண்ண பைகள் உள்ளன. இந்த பைகள் முலமாக தான் விரும்பும் நிறத்தை தன் தோல் மீது படிய செய்து நிறத்தை மாற்றுகிறது. 



கணவாய் மீனின் உடலின் பக்கவாட்டினை சுற்றி இலை போன்ற மெல்லிய உறுப்பு இருக்கிறது. இது நீந்தும் போது இந்த இலை போன்ற மெல்லிய உறுப்பு அசைவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.  ஆக்டோபஸ் போன்று இதற்கும் தன் நிறத்தை மாற்றும் திறன் பெற்றது. பொதுவாக இது உணவு தேடும் போது அது இருக்கும் இடத்தின் நிறத்தை போன்று தன்னையும் மாற்றி கொள்ளும் இதனால் இரை இதன் இருப்பை அறியாமல் அருகில் வரும் போது பிடித்துக்கொள்ளும் மற்றும் எதிரிக்கு தான் இருப்பை தெரியாத வாரு தன்னை மறைத்துக்கொள்ளுவதற்கும் இது நிறம் மாறுகிறது மேலும் நேரடியாக எதிரியிடம் மோதும் போது, தான் தோற்கும் நிலையில்,  கணவாய் மீன் எதிரியிடம் இருந்து தப்பித்து கொள்ள ஆக்டோபஸ் போன்று ஒரு வித மை போன்ற திரவத்தை வெளிப்படுத்தி அதனால் எதிரியின் கண் பார்வையை மறைத்து அதனை நிலைகுலைய செய்து அங்கிருந்து தப்பித்துவிடும்



இதற்கு நீளமான எட்டு விரல்கள் நீந்துவதற்கும் மற்றும் இரையை பிடிப்பதற்கு இரண்டு விரல்களும் இருக்கும். இரை பிடிக்கும் விரல்கள் சற்று நீளமாக இருக்கும். இந்த இரை பிடிக்கும் விரல்கள் மற்ற நேரங்களில் தன் மற்ற விரலோடு மறைத்து வைத்திருக்கும். 


. கணவாய் மீன்களில் பல வகைகள் உள்ளன. இந்த மீன் பல நாடுகளில் மனிதனின் உணவாக பயன்படுகிறது. .உணவாக பயன்படுவதால் தான் நாம் இதை மீன் என அழைகிறோம் என நினைகிறேன்.


கடல் காற்று வீசும்.....

Saturday, 18 May 2013

Taarak Mehta ka Ooltah Chashmah.



இன்றைய  உலகில்  பொழுதுபோக்கில் முதன்மையாக இருப்பது தொலைக்காட்சி. மேலும் தமிழ் தொலைக்காட்சியில் பெண்களுக்கென்றே ஒரு தனி இடம் வகிப்பது சீரியல்கள.

முதலில் இந்த சீரியலால் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களிடம் பகீர்ந்துகொள்கிறேன். வெறும் அனுபவம் மட்டும் அல்ல அதில் ஒரு பாடமும் கற்றுக்கொண்டேன்.

எனது நண்பர்களில் ஒருவர் புதிதாக வீடு கட்டியிருந்தார். அவர் வீட்டு கிரகபிரவேசத்திற்கு போக முடியாத சூழலில் வேறு ஒரு நாளில் வருவதாக வாக்குருதி கொடுத்திருந்தேன். இரண்டு வாரம் கழித்து, ஒரு வீட்டு அலங்கார பொருளை வாங்கி கொண்டு அவர் வீட்டுக்கு இரவு 07.00 மணிக்கு சென்றேன்.

நண்பரும் மகிழ்ச்சியுடன் என்னை அழைத்து சோபாவில் அமர செய்து டீ பிஸ்கெட் கொடுத்து உபசரித்து என் அருகில் அமர்ந்துவிட்டார். பின்பு நான் கேட்ட கேள்விக்கு ஏனோ தானோ என்று பதில் அளித்தார். முதலில் எனக்கு புரியவில்லை. பின்புதான் தெரிந்தது அவர் கவனம் தொலைகாட்சியில் இருப்பது. அவர் குடும்பத்தாரோ மரியாதைக்கு இரண்டு வார்த்தை பேசி விட்டு நானாச்சி என் நண்பனாச்சி என்று சீரியல் பார்த்துகொண்டுருந்தனர். அவர்கள் பார்வை உபசரிப்பு எல்லாம் விளம்பர இடைவெளியின் போது மட்டும் என் பாக்கம் திரும்பியது. வந்திருக்கும் நபர் என்ன நினைப்பார் என்ற எண்ணம் கூட இல்லை அவர்களுக்கு. ஆண்கள் சீரியல் பார்க்க மாட்டார்கள் எனும் எனது எண்ணத்தை அன்றோடு குழிதோண்டி புதைத்துவிட்டேன்.அன்று  வேறுவழியின்றி இரண்டு மகா மட்டமான சீரியல் பார்க்க நேர்ந்தது . 

எனக்கு என்ன சோகம் என்றால் அவர் என்னை அப்படி வதைத்தும் கடைசி வரை வீட்டை சுற்றிக்காட்டவில்லை என்பது தான. அங்கு இருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இதில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் இரவு 06.00 மணிக்கு மேல் யார் வீட்டிற்கும் போக கூடாது என்பது தான். யாருக்கு தெரியும் அவர்களும் ஏதேனும் சீரியல் பார்க்கலாம். இப்படி இவர்கள் பார்க்கும் சீரியல்கள் தரமானதுதானா?

தமிழ் சீரியலில் பெருமான்மையான பெண்கள்  கொடுர மனம் கொண்டவர்களாக காட்டப்பட வேண்டும் என எழுதபடாத சட்டம் இருக்கிறதா என தெரியவில்லை. நான் பார்த்த ஒரிரு சீரியலில் பெண்கள் கொடுர மனம் கொண்டவர்களாகவும், சூழ்ச்சி செய்பவர்களாகவும், அடுத்த குடும்பங்களை கெடுக்க நினைப்பவர்களாகவும் தான் அவர்கள் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளது.

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை " என்ற பழமொழி நம்மிடத்தில் தோன்றியதா அல்லது மேலை நாட்டின் இறக்குமதியா என்ற சந்தேகம் இந்த சீரியல்களை பார்த்து போது  எனக்கு தோன்றியது. இந்த சீரியலில் உச்சகட்ட அபத்தங்களாக பெண்கள் கொலை செய்பவர்களாகவும், அடுத்த பெண்ணின் கணவனை மயக்கி தான் வலையில் விழ வைப்பவர்களாகவும் காட்டப்படுவதும் தான். ஆனால் ஆண்கள் நல்லவர்களாக கண்ணியமானவர்களாக  இருக்கிறார்கள் (சினிமாவில் உல்டா). உண்மையில் பெண்கள் இப்படிபட்ட மனம் கொண்டவர்கள்தானா என சநதேகம்படும் அளவிற்கு நம்மை  எண்ண வைத்துவிடுகின்றனர். இதை எல்லாம் யாரும் கண்டித்ததாக தெரியவில்லை.

நகைச்சுவைக்கு என்று தனிதொலைக்காட்சி தமிழில் வந்தபோது நான் எதிர்பார்த்தது நகைச்சுவை நாடகங்கள். ஆனால் சினிமா நகைச்சுவை துணுக்குகளை கொண்டே முழு தொலைக்காட்சியும் இயங்கிகொண்டு இருக்கிறது, இது ஒரு வித சலிப்பை ஏற்படுத்துகின்றது. தமிழில் தரமான நகைச்சுவை நாடகம் இல்லாதது மிக பெரிய குறையே.



இப்போ மேலே உள்ள  தலைப்புக்கு வருவோம். இந்தி சேனல்கள் எற்கனவே பரிட்சியமானவர்களுக்கு தெரிந்திருக்கும், இது ஒரு இந்தி நகைச்சுவை நாடகத்தின் தலைப்பு என்று. தமிழில் இது போன்ற நாடகம் இல்லையென்ற  வருத்தம் எனக்குண்டு. இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அன்பு ,பாசம், சகோதரத்துவம்,குடும்ப உறவுகள்,  பெரியவர்களை மதித்தல், ஒற்றுமையுடன் வாழ்தல் பேன்ற பண்புகளை கொண்டவர்களாக படைக்கப்பட்டுள்ளனர். இந்த நாடகம் SONY SAB இந்தி நகைச்சுவை தொலைக்காட்சியில் இரவு 08.30 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு மறுநாள் மதியம் 02.00 மணிக்கும் ஒளிபரப்பபடுகின்றது. மேலும் இதன் பழைய ஏபிசோட்கள் மாலை 05.30 மணி முதல் இரவு 07.30 வரை ஒளிபரப்பபடுகின்றன.


இந்த நாடகம் ரசிக்கும்படி இருக்கிறது ஆனால் கொஞ்சம் இந்தி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். மொழி தெரியாமல் பார்த்தாலும் நடிகர்களின் முகபாவம் நமக்கு சிரிப்பை வரவைத்தாலும் அவர்களின் dialog deliveryயே அதிக நகைச்சுவை கொண்டதாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது  இந்த நாடத்தை பார்த்து மகிழுங்கள்.


கடல் காற்று வீசும்............

மனிதனின் கடவுள்


திருவிளையாடல் படத்தில் நாகேஷ், சிவாஜி கணேசனிடம் அவர் அறிவை சோதிக்க, கேள்வி மேல் கேள்வி கேட்பார். அதில் ஒரு கேள்வி பிரிக்கமுடியாதது ஏதுவோ? அதற்கு அவர் எதுகையும் மோனையும் என்று பதில் அளிப்பார். ஆனால் என்னை கேட்டால்  மனிதனும் அவன் குணமும் தான் என்று சொல்வேன்.

சிறுவயதில், அது ஏனோ தெரியவில்லை எனக்கும் கடவுளுக்கும் ஒத்துவருவதில்லை (கடவுள் கற்பனையினு அப்போ எனக்கு தெரியாது). கோயிலுக்கு போகும் போது எனக்கு வேண்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எற்பட்டதில்லை ( அப்படி வேண்டி என்னத்தை கொடுக்கப்போறாரு என்ற எண்ணமாக இருக்கலாம்). 

உண்மையில் அந்த வயதில் எனக்கு பிரார்த்தனை மீது ஒரு சலிப்பு இருந்தது. அந்த சலிப்பு எனக்கு கடவுள் நம்பிக்கை முற்றிலும் அற்று போகும் வரை இருந்தது.

 நாங்கள் பத்தாவது பாஸ் செய்திருந்த போது எனது நண்பர்கள் அனைவரும் கோயிலுக்கு சென்றனர், நன்றி கடன் செலுத்துவதற்கு. அவ்களுடன் நானும் சென்றேன். அப்பொழுது கோயிலை சுற்றி வரும் போது கோயிலின் பின்புறம் என்னை தவிற மற்றவர்கள் அனைவரும் தங்களுடைய ரோல் நம்பரை எழுதி வைத்திருந்தனர் என்பதை அறிந்த போது எனக்கு ஆச்சர்யமாகவும் கவலையாகவும் இருந்தது. அட! இப்படியெல்லாம் பிரார்த்தனை செய்யலாம் என்று தெரிந்திருந்தால் நாமும் செய்து அதிக மதிப்பெண்ணும் பெற்று இருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் கொடுமை என்னவென்றால் எழுதி வைத்திருந்தவர்கள் அனைவரும் என்னைவிட குறைந்த மதிப்பெண்ணே பெற்று இருந்தனர். அதன் பின்பு கடவுளிடம் இருந்து நான் விலகிச்சென்றுவிட்டேன்.

கடவுள் பிரார்த்தனைகளில் எந்த அளவு நான் விலகியிருந்தேனோ, அந்த அளவு மற்றவர்களின் பிரார்த்தனை எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. எனென்றால் அவர்களிடத்தில் பல முரண்பட்ட செயல்களை நான் பார்க்க நேர்ந்தது.

இப்போது நான் பார்த்த  கடவுள் நம்பிக்கையுடைய நபர்களின் குணத்தை பற்றி சொல்ல போகிறேன். விடுமுறையில் எங்கள் முழுநேர வேலை கிரிகெட் விளையாடுவதுதான் அப்படி விளையாடும் போது ஆகும் செலவுகளை எங்களுக்குள் பிரித்து கொள்வோம். அதில் ஒரு நண்பன் மட்டும் பெரும்பாலும் பணம் தரமாட்டான். ( விளையாடுவதற்கு நண்பர்கள் பற்றா குறையால் யாரும் அவனை வற்புர்த்த மாட்டார்கள்.) அவனுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் அவன் குடும்பமும் அப்படி தான. பிரார்த்தனைக்கு அதிக நேரம் செலவிடுவார்கள். ஒருமுறை அவனிடம் அவன் பங்கை கேட்ட போது வழக்கம்போல் இல்லை என்று மழுப்பினான். நான் கோபத்தில் சாமியல்லாம் நல்லா கூம்பிடுற ஆனா பணம் மட்டும் தர மாட்ர? என்றேன். இரு வருகிறோன் என்று சென்றுவிட்டான். சரி அவனை  சமாதானப்படுத்தி கூட்டிவர நானும் மற்றொரு நண்பனும் சென்றோம். அவன் குடும்பம் சற்று வசதிபடைத்ததுதான் இருந்தும் அவன் தருவதில்லை.நாங்கள் அவன் வீட்டின் அருகில் செல்லும் போது அவன் எங்கள் எதிரில் வந்து  தன் பங்குக்குண்டான பணத்தை தந்தான். ஆனால் ஞாயிற்று கிழமை பிரார்த்தனைக்கு செல்வதற்கு ஆட்டோ முதல் இதர செலவுக்கு அவனிடம் பணம் இருக்கும் என்பது எங்களுக்கும் தெரியும். அவனும் அன்றைக்கு செலவு செய்ய பணத்தை சேமித்து வைக்கவே விரும்புகின்றான் .அதன் பின்பும் பெரும்பாலும் அவன் தன்பங்கை தருவதில்லை. நாங்களும் அதை பொரியதாக எடுத்துகொள்வதில்லை.

எனக்கு தெரிந்த ஒருவர்  ரொம்ப கஞ்சம். தனக்கு கீழ் தற்காலிக பணிபுரிவர்களுக்கு கிடைக்க வேண்டிய சில சலுகைகளை கூட தானே எடுத்துக்கொள்வார். அவர் மிகுந்த கடவுள் பக்தர். ஒருமுறை எங்களை அவர் வீட்டு புஜைக்கு அழைத்த போது வேறு வழியின்றி செல்ல வேண்டி இருந்தது.  நானும் பரவாயில்லை இப்படியாவது செலவு செய்கின்றாறே என்று எண்ணிணேன். அவர் வீட்டுக்கு சென்ற பின்புதான் தெரிந்தது நான் எண்ணியது தவறு என்று. எல்லாம் இரண்டாம்தர பொருட்களால் செய்த பிரசாத சாப்பாடுகள். சிக்கனமாக இவ்வளவு பெரிய புஜையை செய்ததாக பெறுமையும் அடித்துக்கொண்டார். 

அடுத்து, என்னுடைய உயர் அதிகாரி ஒருவர் எப்பொழுதும் பந்தாவாக சுற்றி திரிவார். அவரை கண்டு அனைவரும் பயப்பட வேண்டும் என்று எண்ணுவார். தான் உயர் அதிகாரி என்ற எண்ணத்தால் யாரிடமும் நட்பாக கூட பழக மாட்டார். தன் அதிகாரத்தையும் பந்தாவையும் தன் தோள் மீது சுமப்பார். அவரை கோயிலில் பார்த்த போது அதே பாந்தாவுடன் சாமி கும்பிட்டார். சாமி கும்பிடுவதிலும் ஒரு பந்தாவை வைத்திருந்தார். கடவுளையும் தனுக்கு கீழ் பணிபுரியும் ஊழியராக நினைத்துவிட்டாரோ! என்னவோ. அலுவலகத்திலும் இங்கும் அவருக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

மற்றோரு சக ஊழியர் அவர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம். உண்மையில் அவருக்கு அலுவலகத்தின் அனைத்து வேலைகளும் அத்துப்படி. அவரிடம் ஏதேனும் சந்தேகங்களை கேட்கும் போது அவர் அவ்வளவு சீக்கிரமாக சொல்லி தர மட்டார். ஒர் இரு நாட்கள் அவர் பின்னாடி அலைந்தால் தான் சொல்லித்தருவார். அதற்குள் நமது தாவு தீர்ந்துவிடும். அதன் பின்பும் அவரிடம் அதே பவ்யமாக நடந்துகொள்ள வேண்டும் இல்லையென்றால் அடுத்த முறை முற்றிலுமாக எந்த உதவியும் செய்ய மாட்டார். உடனே சொல்லி தந்தால் அவரின் மதிப்பு அடிபட்டு போகும் என்ற அவரின் எண்ணம் தான் என்பதை தெரிந்துகொண்டேன். அவரும் மிக சிறந்த கடவுள் பக்தர். மாலையில் குளித்து புஜை செய்யாமல் எந்த வேலையும் செய்ய மாட்டார். அவரின் கடவுள் பக்தியை அறிந்துகொண்ட சக ஊழியர்கள் அவருக்கு அந்த கோயில் பிராசாதம், இந்த கோயில் பிராசாதம் என்று எதையாவது கொடுத்து அவரிடம் நல்ல பெயர் எடுக்க முயற்ச்சி செய்துகொண்டு இருந்தார்கள்.

என்னை பொறுத்தவரை கடவுளை வணங்குபவர்களுக்கு, எந்த தனி சிறப்பு மிக்க பண்புகள்  இருப்பதாக தெரியவில்லை.  கடவுளை வணங்குபவர்கள் எந்த விதத்திலும் கடவுளுக்காக தங்களை மாற்றிகொள்வதில்லை. மேலும் அவர்கள் பழிபாவத்திற்கு அஞ்சுவார்கள், யாருக்கும் தீங்கு செய்யமாட்டார்கள் என்பதெல்லாம் முற்றிலும் உண்மையில்லை. சாமி கும்பிடாதவனை விட சாமி கும்பிட்ரவன் தான் அதிக தவறுகள் செய்கின்றான. இதற்கு உதாரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் கருவரையில் தனது மன்மத லீலைகளை செய்த குருக்களையும், நடிகையுடன் ஊல்லாசமாக இருந்த சாமியாரையும் கூறலாம். இவர்கள்  அனைவரும் தங்கள் குணத்திற்கு ஏற்றார் போல் கடவுளை adjust செய்துகொள்வார்கள் என்பதே உண்மை.



கடல் காற்று வீசும்............