Sunday, 18 August 2013

insects

வாழும் இடத்தின் அமைப்பு மற்றும் நிறத்திற்கு தகுந்தார் போல் தன் உடலை தகவமைத்துக்கொண்டு  மறைத்து கொள்ளும் பூச்சிகளை பார்க்க நேர்ந்தது. அதில் சில க்ளிக்குகள்







Tuesday, 6 August 2013

காதல்...

காதல் மிக அழகான சொல். இக்காதல் இலக்கியங்கள் முதல் தற்போது சினிமா வரை எவ்வளவு அழகாக சொல்ல முடியுமோ, அவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்கள். இதை பற்றி நினைக்கும் போதே அனைவருக்கும் உள்ளம் குதுகலிக்கும். மேலும் காதலை சுவாசிக்காதவர்கள் இவ்வுலகில் இல்லையென சொல்லலாம். ஏதோ ஒரு காலகட்டத்தில நாம் அனைவருக்கும், இந்த அனுபவம் எற்பட்டு இருக்கும். நமக்கு சரியென பட்ட ஒன்று பெற்றோராக நாம் மாறும் போது தான், அதில் உள்ள அபத்தங்களும் தவறுகளும் தெரிகிறது. தெரிவது மட்டுமல்ல மிக பெரிய கவலையையும் தருகிறது. காதல் என்பது காமத்தின் வெளிப்பாடு என இளவயதில் யாரும் அறிவதில்லை. காதல் புனிதமானது, தெய்விகமானது என்பதெல்லாம் இலக்கியத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பதை காதலிப்பர்கள் அறிவதில்லை.

என்னுடைய கல்லூரி நாட்களில் காதலிப்பவர்களை பார்த்து எனக்கும் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் எற்பட்டதுண்டு (நல்லவேளை அப்போது எனக்கு எந்த காதலியும் கிடைக்கவில்லை).  பின்னாளில் படிப்பு வேலையென அலைந்த போது எனக்கு அந்த எண்ணம் இல்லாமல் போனது (எனக்கு காதலி கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்ட நாட்களும் உண்டு). அந்த நாட்களில் நான் நினைத்ததை இப்போது எண்ணி பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. 14 முதல் 21 (இது ஒரு தோராயமான கணக்கு தான் அவர் அவர் அனுபவத்திற்கு எற்ப்ப மாறுபடும்) வயது வரை ஒரு குழப்பமான காலகட்டம் என்ற உண்மையை இப்போது தான் என்னால் உணர முடிகிறது. 14 முதல் 21 வயது வரை உள்ள தங்கள் குழந்தை சில சமயம் தடம் மாறி காதல் வலையில் விழும்போது சில பெற்றோர்கள் சாதுர்யமாக அவர்களை அதில இருந்து மீட்கிறார்கள். ஆனால் எல்லா பெற்றோராலும் அது முடிவதில்லை. இப்படி தடம் மாறி காதலில் விழும் தம் குழந்தைகளை மீட்க முடியாமல் தவித்து இதனால் எற்படும் கவலையாலும் மனஉளைச்சலாலும் சிலர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் (காதலர்களும் தான்). சில இழப்புகளுக்கு பின் தான் தன்னுடைய தவறையே காதலிப்பவர்கள் உணர்கிறார்கள். காதல் இலக்கியத்திலும் சினிமாவிலும் இருப்பது போல் நிஜவாழ்க்கையிலும் இருக்கும் என நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமானது என்று அவர்கள் உணரும் போது காலம் கடந்துவிட்டுருக்கும்.

ஓரு எ.கா .. எனது நண்பர்களில் ஒருவன் ஒரு பெண்ணை காதலித்துகொண்டிருந்தான். அப்போது அவளை பற்றி சொல்லும் போது அவளுக்கு முற்றிலுமாக சமைக்க தெரியாது எனவும் காய்கறி கூட அறுக்க தெரியாது எனவும் வேடிக்கையாக சொன்னான். அவனுக்கு அப்போது அது ஒரு அற்ப்ப விசயமாகபட்டது. பின்னாளில் அவளை திருமணம் செய்த பின் சரியாக சமைக்க தெரியவில்லையென திட்டிக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவளை அடிக்கவும் செய்தான். அவளுக்கு சமைக்க தெரியாது என நன்கு தெரிந்து தான் திருமணம் செய்துகொண்டான். காதலிக்கும் போது இருந்த சகிப்பு தன்மை கல்யாணம் ஆன பின் அவனிடம் அது முற்றிலுமாக இல்லை. இது தான் எதார்த்த உண்மை. இதை காதலிப்பவர்கள் அனைவரும் உணர வேண்டும்

இதில் பெண்களும் விதிவிலக்கல்ல.. இதற்கு ஒரு எ.கா நான் படித்ததை சொல்கிறேன். ஒரு பெண் கல்லுரியில் பேராசிரையாக பணிபுரிகிறாள் அவள் பள்ளியில் படிக்கும் போது தன் வீட்டின் அருகில் உள்ள ஒருவருடன் காதல்.  அந்த நபர் 8வது மட்டும் படித்தவர் சொந்த தொழில் செய்பவர். ஒருகாலகட்டத்தில் வீட்டின் எதிர்ப்பை மீறி அவரை கல்யாணம் செய்துகொண்டாள். கல்யாணம் செய்துகொண்ட பின் அவர் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டை வைத்தாள். சரியாக பேச தெரியவில்லை, உடை உடுத்த தெரியவில்லை, பொது அறிவில்லை, இங்கிதமாக நடக்க தெரியவில்லை என பல.. இது எல்லாம் முன்பே அவளுக்கு தெரியும் ஆனால் இப்போது இதை சகித்துகொள்ள அவளால் முடியவில்லை. அதன் பின் அந்த உறவு எப்படி முடிந்திருக்கும் என சொல்ல தேவையில்லை.

வாழ்க்கையை பற்றிய புரிதல் இல்லாமல் இனகவர்ச்சியில் காதலித்து கல்யாணம் செய்துகொண்டால் அதனால் துன்பம் மட்டும் தான் மிஞ்சும் என்பதை இவர்கள் அறிவதில்லை. 

நான் மேல் சொன்ன அனைவரும் நன்கு படித்து மற்றும் பொருளாதரத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர்கள். இவர்கள் காதலே இப்படி இருக்கும் போது இளம் வயதில் காதலித்து பெற்றோரை எதிர்த்து கல்யாணம் செய்துகொண்டவர்களின் நிலை எப்படி இருக்கம் என யோசித்து பாருங்கள்.

நான் 10வது படிக்கும் போது இருந்த காலத்தில் ஒரு பெண்ணை சற்று முறைத்து பார்த்தால் கூட  மறுநாள் தந்தையை கூட்டிவந்துவிடிவாள் ஆனால் இன்று பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து அவனுடன் ஒடிச்சென்றுவிடுகிறாள். இந்த அளவுக்கு காலம் மாறியது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. இதற்கு அநேகமாக சினிமாவும் மேலைநாட்டு கலாச்சாரமும் ஒரு காரணம் என சொல்கிறார்கள்.

சினிமாவை நாம் தவிர்க்க முடியாது, அது மனமகிழ்ச்சிக்கான அஃதின பொருள் என உணர்ந்து, சினிமாவை சினிமாவாக பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். அதை நிஜவாழ்க்கையோடு இணைத்து குழப்பிக்கொள்ள கூடாது. 

மேலைநாட்டில் ஒரு பெண், சிறு வயதில் காதலித்து குழந்தை பெற்றுக்கொண்டு, அதன் பின் கல்யாணம் செய்து வாழும்போது, அந்த வாழ்வில் விரிசல் விழுந்து அவர்கள் பிரிந்தாலும் அந்த பெண்ணுக்கு உடனடியாக வேறு காதலன் கிடைப்பதுடன் அந்த குழந்தைக்கு தந்தையும் கிடைத்துவிடுகிறது. அதுயெல்லாம் அவர்களுக்கு சர்வ சாதாரணம். மேலும் பெண்ணின் பெற்றோரும் அவளை புறகணிப்பதில்லை.. இதையெழுதும் போது ஒரு கைபேசியில் வந்த நகைச்சுவை குறுச்செய்தி எனக்கு நினைவுக்கு வருகிறது.

மேலைநாட்டின் தம்பதியர்கள் பேசிகொள்கிறார்கள்.
மனைவி கணவனிடம்: "அங்கு என்ன சத்தம் டியர்"
கணவன்: "ஒன்னுமில்ல டியர்".... "என்னுடைய குழந்தையும், உன்னுடைய       குழந்தையும், சேர்ந்து நம்முடைய குழந்தையிடம் சண்டை போடுகிறார்கள்"... என சொன்னான.

இது நகைச்சுவையாக இருந்தாலும் உண்மை நிலையும் இதுவே. மேலும் அங்குள்ள அரசாங்கமும் குழந்தைகளுக்கு பல சலுகைகளை தருகிறது என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது

இதனால் நான் யாரையும் காதலிக்க கூடாது என சொல்லவில்லை. இளம்வயதில் கண்டிப்பாக காதலிக்க கூடாது என்பது தான் என் கருத்து. 21 வயதிற்கு மேல் தான் ஒருவித அனுபவம் கிடைத்திருக்கும் அதன் பின் எடுக்கும் முடிவு சரியாக இருக்க வாய்ப்புள்ளது. (கவனிக்கவும் வாய்ப்புள்ளது எனதான் சொல்லியுள்ளேன்).
 
என்னை பொருத்தவரை பெண்கள் காதலிப்பதற்க்கு முன் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும். நன்கு படித்து தனக்கான நல்ல வேலையை தேர்ந்தெடுத்துகொண்டு பொருளாதரத்தில் உயர்ந்த பின்தான் காதலை பற்றியே அவள் சிந்திக்கவேண்டும். தன்னை வளர்த்த பெற்றோருக்கு ஒன்றும் செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை, ஆனால் அவர்களுக்கு துன்பத்தை மட்டும் கட்டாயம் கொடுக்க கூடாது என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணிற்க்கும் இருக்க வேண்டும்.

மேலும் சில வெளிப்படையான உண்மையை பெண் அறிய வேண்டும். 
ஒருவன் பல பெண்களை காதலித்தால் அவனை கண்ணன் மற்றும் மன்மதன் என அழைக்கும் நம்மவர்கள். ஏதோ ஒரு அறியாமையால் தவறு செய்த பெண்ணை என்ன சொல்லி அழைப்பார்கள் என எண்ணி பார்க்க வேண்டும். மேலும் இவர்கள் கணவனை இழந்த அல்லது விவாகரத்து ஆன பெண்களை திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். ( அப்படி திருமணம் செய்துகொள்பவர்கள் எற்கனவே திருமணம் ஆனவர்களாக தான் இருப்பார்கள். சில சமயம் இவர்களும் திருமணம் ஆகாத ஏழை பெண்களை திருமணம் செய்யவே முயற்ச்சி செய்கிறார்கள். ஒருவேளை கிடைக்கவில்லையெனில் தான் மற்றவர்கள்.)

இதையெல்லாம் அறியாமல் பெண்கள் சிறுவயதிலே காதல் வலையில் சிக்கினால் துன்பம் என்னவோ இவர்களுக்கு தான் எனபதை இவர்கள் நன்கு உணர வேண்டும். இப்போது அன்பாக இருக்கும் காதலன் பிற்காலத்தில் மாற வாய்ப்பு மிக மிக அதிகம் என்ற எதார்த்த உண்மையை அறிந்து தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டும்.

நான் பார்த்த ஒரு சகோதரியை பற்றி சொல்லி இப்பதிவை முடிக்கிறேன். என் வீட்டின் அருகில் குடியிருந்த அந்த சகோதரியின் பெற்றோர் நடுத்தர குடுப்பத்தை சேர்ந்தவர்கள். தன் தந்தையின் நிலையை நன்கு உணர்ந்த அவள் தன்னுடைய கடின உழைப்பாள் நன்கு படித்து ஒரு வேலையை தேர்ந்தெடுத்து தனது கல்யாணத்திற்கும் குடுபத்திற்கும் தேவையான பணத்தை அவள் சேர்ந்து வைத்தால். எனக்கு தெரிந்து பல கண்ணன்களும் மன்மதன்களும் பலநாள் பல அம்புகள் விட்டும் அவள் மனதை கலைக்கமுடியவில்லை.  அவளுக்கு என்று இருந்த தனித்தன்மையை அவள் இழக்க விரும்பவில்லை. பின் தனது கல்யாணம் முடிவான போது அவள் தந்தையே ஆச்சர்யப்படும் அளவுக்கு ஒரு தொகையை கொடுத்தால். மேலும் வரப்போகும் கணவனிடம் எவ்வாறு வாழ்க்கையை அமைத்துகொள்ள வேண்டும் என்ற மனபக்குவமும் அவளிடம் இருந்தது. இதை போன்று மனபக்குவமுள்ள பெண்களை பெற்ற பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்... வேறு என்ன சொல்ல.....


கடல் காற்று வீசும்.....